ஏரியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஏரியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 July 2021 5:11 PM GMT (Updated: 1 July 2021 5:11 PM GMT)

ஏரியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அரசூர், 

இரு கிராம மக்கள் இடையே தகராறு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் ஊராட்சிக்குட்பட்டது துலுக்கபாளையம் கிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. ஏரியில் மீன் வளர்க்க கடந்த ஜனவரி மாதம் பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டது. துலுக்கபாளையம் கிராம மக்கள் சார்பில் லோகநாதன் என்பவர் மீன்வளர்க்க பொதுப்பணித்துறை அலுவலாகத்தில் ரூ.29 ஆயிரம் கட்டினார். இதேபோல் மணக்குப்பம் காலனியை சேர்ந்த குப்புசாமி என்பவர் மீன்வளர்க்க ரூ.59 ஆயிரம் கட்டினார் இதையடுத்து அதிக தொகை கட்டிய குப்புசாமிக்கு ஏலம் விடப்பட்டது. இதனால் இருகிராம மக்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

சமாதான கூட்டம்

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி குப்புசாமி காவல்துறை மூலம் ஏரியில் மீன் பிடிக்க முயன்றார். இதைபார்த்த துலுக்கபாளையம் கிராம மக்கள் விரைந்து வந்து மீன்பிடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் இருகிராம மக்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் இருகிராமத்தை சேர்ந்தவர்கள் ஏரியில் மீன்களை பிடிக்கக்கூடாது எனவும், மீன்வளத்துறை மூலம் மீன்களை பிடித்து விற்பனை செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு மணக்குப்பம் கிராம மக்கள் ஒப்புக் கொண்டனர். துலுக்கபாளையம் கிராம மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

மறியல்

இந்நிலையில் நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் துலுக்கபாளையம் ஏரிக்கு வந்து மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த துலுக்கபாளையம் கிராம மக்கள் விரைந்து வந்து மீன் பிடிக்கும் பணியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், அந்த  பணியை உடனடியாக நிறுத்தக்கோரியும் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே  கடலூர்-சித்தூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ஆனந்தன், விழுப்புரம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 3 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story