ஆம்பூரில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்


ஆம்பூரில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்
x
தினத்தந்தி 1 July 2021 11:31 PM IST (Updated: 1 July 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்

கடன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38). இவர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி குடும்ப செலவுக்காக ரூ.2 லட்சத்தை கடனாக அதே பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரிடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடன் பெற்ற 10 நாட்களிலேயே பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு பிரேமா ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது. 

இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டில் ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். வீட்டில் இருந்த குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து ஜெயலட்சுமியை காப்பாற்றி உள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி

இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுக்க சென்றார். அங்கு கால தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதனால் போலீஸ் நிலையம் முன்பு ஜெயலட்சுமி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தி, விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். 
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story