பட்டாசு ஏஜெண்டிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சம் திருட்டு


பட்டாசு ஏஜெண்டிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 1 July 2021 11:42 PM IST (Updated: 1 July 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த பட்டாசு ஏஜெண்டிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சத்தை திருடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

சிவகாசி
சிவகாசியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த பட்டாசு ஏஜெண்டிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சத்தை  திருடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.2 லட்சம்
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியை சேர்ந்தவர் சங்கர்ராம் (வயது 48). இவர் பட்டாசு ஆலைகளில் இருந்து சிறு வியாபாரிகளுக்கு பட்டாசுகளை வாங்கி கொடுக்கும் ஏஜெண்டு. இவர் தனது கணக்கில் உள்ள ரூ.2 லட்சத்தை எடுக்க சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு நேற்று வந்தார். 
இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு வங்கியின் உள்ளே சென்ற அவர் சிறிது நேரத்தில் ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்துடன் வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் ரூ.2 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் கவரில் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி உங்களுக்கு சொந்தமான பணத்தை நீங்கள் தவற விட்டு வந்துவிட்டீர்கள் என்று கூறி சற்று தொலையில் ரூபாய் நோட்டுக்கள் சிதறி கிடப்பதை காண்பித்துள்ளார். இதைதொடர்ந்து சங்கர்ராம் கீழே சிதறி கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்தை அந்த மர்ம நபர் எடுத்துக்கொண்டு தயாராக இருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.
விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர்ராம் சிவகாசி டவுன் போலீசில் (குற்றப்பிரிவு) புகார் செய்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினார். நூதன முறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் வரை ஈடுபட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
நூதனமுறையில் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபருக்கு உதவியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற நபர், இவர்களுடன் சென்ற மற்ற 2 பேர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story