சித்த மருத்துவ கல்லூரிக்கு நவீன ரத்த பரிசோதனை எந்திரம்; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்


சித்த மருத்துவ கல்லூரிக்கு நவீன ரத்த பரிசோதனை எந்திரம்; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 July 2021 12:59 AM IST (Updated: 2 July 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியின் நவீன ரத்த பரிசோதனை எந்திரத்தை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லை:
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியின் நவீன ரத்த பரிசோதனை எந்திரத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நவீன பரிசோதனை எந்திரம்

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.12 லட்சம் மதிப்பிலான ‘‘ஹீமாட்டாலஜி அனலைசர்’’ எனப்படும் நவீன ரத்த பரிசோதனை கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு புதிய கருவியை வழங்கி செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இங்கு செயல்பட்டு வந்த பரிசோதனை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு குறைந்தது 1½ மணி நேரம் தேவைப்பட்டது. தற்போது ரூ.3.12 லட்சம் மதிப்பில் ஹீமாட்டாலஜி அனலைசர் என்ற தானியங்கி ரத்த பரிசோதனை கருவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவியின் மூலம் 3 நிமிடங்களில் ரத்த பரிசோதனை செய்து முடிக்க முடியும். கருவி உதவியுடன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றினை மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் பரிசோதனை செய்ய இந்த கருவி பயன்படுகிறது.

டெல்டா பிளஸ் கொரோனா

நெல்லை மாவட்டத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பரவல் இல்லை. தற்போது கொரோனா தொற்று மிகவும் குறைந்து வருகிறது. இருந்த போதிலும் பொதுமக்கள் கொரோனா பரவாமல் விழிப்போடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு சித்தா கல்லூரி டீன் திருத்தணி, துணை முதல்வர் மனோகர், உறைவிட மருத்துவர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story