தென்காசியில் கொரோனா தடுப்பு தற்காலிக பணிக்கு குவிந்த பெண்கள்
தென்காசியில் கொரோனா தடுப்பு தற்காலிக பணிக்கு பெண்கள் குவிந்தனர்.
தென்காசி:
தென்காசியில் கொரோனா தடுப்பு தற்காலிக பணிக்கு பெண்கள் குவிந்தனர்.
நேர்முக தேர்வு
தென்காசி மாவட்டத்தில் சுகாதார துறையில் கொரோனா தடுப்பு பணிக்காக சுகாதார ஆய்வாளர்கள் 5 பேர், செவிலியர்கள் 5 பேர், மருந்தாளுனர்கள் 2 பேர் ஆகியோர் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதற்கான நேர்முக தேர்வு தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மொத்தம் 12 பேர் தேவைப்படும் இந்த பணிக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள நேற்று காலை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு வந்தனர். ஏற்கனவே மாவட்ட கலெக்டரின் அறிவிப்பில் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் வந்தவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர். அதில் பலர் முககவசங்களை முறையாக அணியவில்லை.
சமூக இடைவெளி இல்லை
சான்றிதழ் சரி பார்ப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலரை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். ஆனால் அலுவலகத்திற்கு வெளியே திரண்டு நின்றிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்துக் கொண்டு நின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் சேர்வதற்காக வந்த செவிலியர் பட்டதாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் பணி மற்றும் மருந்தாளுனர் பணிக்கு வந்தவர்கள் சமூக இடைவெளி இல்லாமல் நின்றது வேதனை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story