ஊருணியில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி


ஊருணியில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 2 July 2021 1:14 AM IST (Updated: 2 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே ஊருணியில் மூழ்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஊருணியில் மூழ்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

2-ம் வகுப்பு மாணவன்

ஆலங்குளம் அருகே மாறாந்தை அம்பலவாசகர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு மதன் (வயது 7), ராகுல் (5) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் மதன் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடம் திறக்கப்படாததால், மதன் பள்ளிக்கு செல்லவில்லை. இவர்களுடன் சுரேஷின் பெற்றோர் ராமையா- கணபதி அம்மாள் வசித்து வருகின்றனர்.

ஊருணியில் தவறி விழுந்து...

நேற்று மதியம் கணபதி அம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப் போது பேரன்கள் மதன், ராகுல் ஆகியோரையும் அழைத்து சென்றார். ஊருக்கு வெளியே சிவன் கோவில் அருகில் உள்ள ஊருணியில் மாடுகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அவற்றை அழைத்து சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மதன் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினான். இதனைப் பார்த்த தம்பி ராகுல் பதறியவாறு பாட்டியிடம் கூறினார். உடனே கணபதியம்மாள் கூச்சலிட்டவாறு அலறி துடித்தார்.

போலீசார் விசாரணை

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது இறந்த மதனின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, மதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story