பெண் திடீர் சாவு; கொரோனா தடுப்பூசி போட்டதால் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல்


பெண் திடீர் சாவு; கொரோனா தடுப்பூசி போட்டதால் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 July 2021 1:25 AM IST (Updated: 2 July 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே பெண் திடீரென்று உயிரிழந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டதால் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் திடீரென்று உயிரிழந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டதால் இறந்ததாக கூறி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

பெண் திடீர் சாவு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மகேந்திரவள்ளி (வயது 37). இவர்களுக்கு நந்தினி, விஜி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மகேந்திரவள்ளி, தேசிய ஊரக திட்டத்தில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மகேந்திரவள்ளி பரிதாபமாக இறந்தார்.

சாலைமறியல்

இதற்கிடையே கடந்த 25-ந்தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மகேந்திரவள்ளி தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் அவர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள், கிராம மக்கள் நேற்று காலையில் சிவசைலம் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். 
இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், தென்காசி தாசில்தார் சுப்பையன், கடையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பழனிகுமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் தேசிய ஊரக திட்டத்தில் வேலை தருவதாக சிலர் வற்புறுத்தியதால்தான் மகேந்திரவள்ளி தடுப்பூசி போட்டுக்கொண்டார். எனவே அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின்பேரில், போராட்டத்தை கைவிட்டு, உறவினர்கள், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story