மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி, அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல்
மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி, அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல்
மங்கலம்,
மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி, அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.
கொரோனா தடுப்பூசி
மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி அனைத்து கட்சி சார்பில் மங்கலம் நால்ரோடு பகுதியில் சாலை மறியல் நடந்தது. மறியலுக்கு மங்கலம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சபாதுரை தலைமை தாங்கினார்.
இதில் மங்கலம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மன்ற வார்டு உறுப்பினர் நடராஜ், திருப்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜானகி, மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் நவமணி கரிச்சியப்பன், காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஜே.எம்.யாசுதீன், தே.மு.தி.க.சார்பில் முருகன், எஸ்.டி.பி.ஐ.அபுதாஹிர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி நிசாத் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல் பற்றி தகவல் அறிந்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீளாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து பின்னர் மங்கலம் அரசுப்பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
ஆனால் சம்பவத்தன்று மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் இல்லை என தெரிவித்துவிட்டு அன்று மாலை 3 மணிக்கு தடுப்பூசி போட்டார்கள். மேலும் தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை கேட்டும் தரவில்லை. ஆகவே மங்கலம் அரசு ஆரம்ப நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு நடக்கிறது.
ஆகவே தடுப்பூசி செலுத்துவதில் முறைகேட்டை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எடுக்கலாம் என தெரிவித்தனர். பின்னர் அனைத்துக்கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கலந்து கொண்டனர்.
சுமூக தீர்வு
அப்போது மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசிகள் குறித்த விவரத்தை கிராம நிர்வாக அதிகாரி, மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மங்கலம் பகுதியில் தடுப்பூசி ஒதுக்கீடு குறித்த விவரங்களை முறையாக தெரிவிப்பது என கூறியதை தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் சமூக முடிவு ஏற்பட்டது.
Related Tags :
Next Story