காசோலையை திருப்பி வழங்கிய வங்கி


காசோலையை திருப்பி வழங்கிய வங்கி
x
தினத்தந்தி 2 July 2021 2:29 AM IST (Updated: 2 July 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் எழுதியதால் காசோலையை வங்கி திருப்பி வழங்கியது

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் பிரபல தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் பூமிவாசகன் என்பவர் வங்கி கணக்கு வைத்து வரவு செலவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் பூமிவாசகன் தனக்கு நிதி நிறுவனம் ஒன்று அளித்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 200-க்கான காசோலையை மேற்கண்ட வங்கியில் பணமாக்க செலுத்தி உள்ளார். 
ஆனால் 5 நாட்களாகியும் பணம் வரவாகாததால் என்ன காரணம் என தெரியாமல் வங்கிக்கு சென்று விவரம் கேட்டுள்ளார். பொதுவாக காசோலைகள் அனைத்தும் பெங்களூருவில் உள்ள ஒருங்கிணைந்த ஒப்புதல் மையத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் அளித்துள்ள காசோலையில் பெயர் மற்றும் பணம் குறித்த விவரங்கள் தமிழில் உள்ளதால் அங்கிருப்பவர்களுக்கு தமிழ் தெரியாது. ஒப்புதல் கிடைக்காது. 
எனவே, வேறு காசோலை ஆங்கிலத்தில் எழுதி வாங்கி வருமாறு தெரிவித்துள்ளனர்.  இதனால் மனம் உடைந்து வேறு வழியின்றி என்ன செய்வதென்று அறியாமல் அந்த காசோலையை பூமிவாசகன் திரும்ப வாங்கி வந்துள்ளார். 
இதுதொடர்பாக வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்த தமிழ் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story