காங்கிரஸ் வலைத்தள நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன? - நடிகை ரம்யா விளக்கம்
காங்கிரஸ் வலைத்தள நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து நடிகை ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
நடிகை ரம்யா
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தார் ரம்யா திவ்யா ஸ்பந்தனா. இவர் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பின்னர் இவர் காங்கிரசில் இணைந்து மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அதையடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மேலும் அவர் அகில இந்திய காங்கிரஸ் வலைத்தள பிரிவு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் அவர் அந்த பொறுப்பில் இருந்து வந்தார்.
பின்னர் திடீரென அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார். இந்த நிலையில் தான் அகில இந்திய காங்கிரஸ் வலைத்தள நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகை ரம்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
மிகப்பெரிய தவறு
அதில், ‘‘ராகுல் காந்தி முன்னாள் எம்.பி.க்களுடன் ஒருமுறை ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிவிட்டது. இதனால் ராகுல்காந்தி மீது தவறான புரிதல் ஏற்பட்டு பலரும் அவருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களிலும் அது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். இதன்காரணமாகவே நான்(நடிகை ரம்யா) அந்த பொறுப்பில் இருந்து விலக நேரிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story