பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் குழந்தைகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம்
நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் குழந்தைகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. 12 மணி நேரம் செயல்படும் இந்த அருங்காட்சியகத்திற்கு ரூ.25 நுழைவு கட்டணம் ஆகும்.
பெங்களூரு:
மீன் அருங்காட்சியகம்
கா்நாடக தலைநகர் பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் உள்ள பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கும், நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட தென்மாநில நகரங்களுக்கும், கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தை தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த ரெயில் நிலையத்தில் தான், இந்திய ரெயில்வே சார்பில் தற்போது குழந்தைகளை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடை அருகே ரூ.1¼ கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த மீன் அருங்காட்சியம் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனை பெங்களூரு ரெயில்வே மண்டல பொது மேலாளர் சவுரவ் ஜெயின், துணை மேலாளர் முன்னிலையில் பயணி ஒருவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அருங்காட்சியத்தில் மீன்களை பயணிகள், ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.
நாட்டில் முதல் முறையாக..
இதுகுறித்து ரெயில்வே மண்டல மேலாளர் சவுரவ் ஜெயின் கூறும்போது, இந்திய ரெயில்வேயின் சாதனை எப்போதும் அளப்பரியது. இந்திய ரெயில்வேக்கு உட்பட்டு 17 ரெயில்வே மண்டலங்கள் உள்ளது. இதில் நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூரு ரெயில்வே மண்டலத்தில் தான் இந்த ரெயில்வே அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அருங்காட்சியகம் செயல்படும்.
ரெயில் பயணம் செய்ய வருவோரின் குழந்தைகளை கவரும் வகையில் தான் இந்த மீன் அருங்காட்சியகத்தை அமைத்து உள்ளோம். இந்த அருங்காட்சியம் ரூ.1¼ கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. நுழைவு கட்டணம் ஒருவருக்கு ரூ.25 ஆகும்.
பொழுது போக்கு
நிச்சயம் இந்த அருங்காட்சியகம் ரெயில் பயணிகளை கவரும் வகையில் இருக்கும். ரெயில்கள் காலதாமதமாக வரும்போது பயணிகள் தங்களது பொழுது போக்குக்கு இந்த அருங்காட்சியத்தை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது.
நாங்கள் எதிர்பார்த்த போல இன்று (நேற்று) கணிசமான அளவில் அருங்காட்சியகத்திற்கு பயணிகள் வந்தனர். கொரோனா முடிந்த பின்னர் அனைத்து ரெயில்களும் இயங்கும்பட்சத்தில் கூடுதலாக இந்த அருங்காட்சியகத்திற்கு பயணிகள் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story