கொலையான கடைக்காரர் உடலை வாங்க மறுப்பு
காதல் திருமண தகராறில் பெட்டிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
காதல் திருமண தகராறில் பெட்டிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காதல் திருமணம்
பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது55) இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாலம்மாள். இவர்களது மகள் புவனேசுவரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது அத்தை மகன் ராஜா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். தற்போது அவர்கள் 2 பேரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் ராஜா குடும்பத்திற்கும் சுகுமாறன் குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுகுமாறனின் வீட்டிற்கு அருகே வசிக்கும் ராஜாவின் உறவினர் கஸ்தூரி வீட்டிற்கு ராஜாவின் தாய் சுசிலா வந்துள்ளார். அப்போது அவரிடம் சுகுமாறன், அவரது மனைவி பாலம்மாள் 2 பேரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
விசாரணை
இதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த கஸ்தூரியின் கணவர் ராமமூர்த்தி எனது வீட்டுக்கு வந்தவரை எவ்வாறு தகாத வார்த்தைகளால் பேசலாம் என கேட்டுள்ளார். உடனே ராமமூர்த்தியை பாலம்மாள், சுகுமாறன் இருவரும் கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இறந்த ராமமூர்த்தியின் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாறன் மற்றும் அவரது மனைவி பாலம்மாள் 2 பேரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் சுகுமாறனை கைது செய்து காவலில் வைத்தனர்.
போராட்டம்
இந்தநிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த ராமமூர்த்தியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகுமாறனின் மனைவி பாலம்மாள், அவருடைய மகன் ரூபன், சுகுமாறனின் தம்பி ராமலிங்கம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
மறுப்பு
ஆனால் அதை ஏற்க மறுத்து ராமமூர்த்தியின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் ஊருக்குச் சென்றனர். உடனே ராமமூர்த்தியின் உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story