தங்கநகை விற்பனைக்கான புதிய விதிகளை எதிர்த்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் வழக்கு


தங்கநகை விற்பனைக்கான புதிய விதிகளை எதிர்த்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் வழக்கு
x
தினத்தந்தி 2 July 2021 6:14 PM IST (Updated: 2 July 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

14, 18 மற்றும் 22 காரட் தங்கநகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்திய தர நிர்ணயம் அமைப்பு (பி.ஐ.எஸ்.) சட்டம் 2017-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில் 2020-ம் ஆண்டு சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த ஜூன் 15-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதன்படி, பி.ஐ.எஸ். தங்க நகைகளை, அங்கீகரிக்கப்பட்ட தங்க நகைக்கடைகள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். அதுவும், 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இந்த காரட் தங்கநகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த புதிய விதிகளினால், நகைக்கடை உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்படுவர். இதுபோன்று தடை தேவையில்லாதது.

நுகர்வோர் முடிவு

3 வகையான காரட் தங்கநகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று இந்தியாவை தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும் தடை விதிக்கவில்லை. இந்தியா முழுவதும் உள்ள தங்கநகை வியாபாரிகள், 15, 16, 17, 19, 20, 21 மற்றும் 24 காரட் தங்கத்தையும் விற்பனை செய்கின்றனர். இந்த புதிய சட்டத்தினால், இந்த வகையான தங்கத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கினால், தங்கம் தேங்கியுள்ளது. எனவே, இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால், இந்த நகைகளை எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல, எந்த வகையான நகைகளை வாங்க வேண்டும் என்பதை நுகர்வோர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தடை வேண்டும்

தென் தமிழகத்தில், 20 மற்றும் 21 காரட் தங்கத்தில்தான் மாங்கல்யம் செய்வார்கள். இதற்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போதுள்ள விதிகளினால், குறிப்பிட்ட காரட் தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். பல வகையான காரட் தங்கத்தை பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். இந்த பழைய தங்கத்தை விற்பனை செய்ய அவர்கள் வரும்போது, அதை வாங்கும் நகைக்கடைக்காரரால், மறு விற்பனை செய்ய முடியாது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த புதிய விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதில் மனு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வக்கீல் வி.டி.பாலாஜி, மனுதாரர் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு 3 வாரத்துக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Next Story