ஆக்சிஜன் உற்பத்திக்கு புதிய எந்திரங்கள்


ஆக்சிஜன் உற்பத்திக்கு புதிய எந்திரங்கள்
x
தினத்தந்தி 2 July 2021 2:58 PM GMT (Updated: 2 July 2021 2:58 PM GMT)

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்திக்கு புதிய எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்திக்கு புதிய எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் கொரோனா பாதித்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டது. மேலும் 150-க்கும் மேல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது.

உற்பத்தி மையம்

தமிழகத்தில் நீலகிரி உள்பட 3 மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையின் மேல்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய உற்பத்தி மையம்(பிளாண்ட்) அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. மழை காரணமாக பணிகள் தாமதமாக நடந்தன. 

அங்கு மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டு, தரைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக வைக்கப்படும் ஜெனரேட்டர் மற்றும் எந்திரங்கள் பாதுகாப்பாக இருக்க சுற்றிலும் தகரத்தால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

திரவ ஆக்சிஜன்

இந்த நிலையில் சென்னையில் இருந்து ஊட்டிக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய புதிய எந்திரங்கள் லாரியில் கொண்டு வரப்பட்டன. அவை ராட்சத கிரேன் மூலம் பொருத்தப்பட்டன. இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஜெனரேட்டர் மட்டும் வர வேண்டி உள்ளது. புதிய பிளாண்ட் மூலம் 1 நிமிடத்துக்கு 1000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.

இதனை சேமித்து வைக்க முடியாது. அங்கிருந்து குழாய்கள் மூலம் கொரோனா வார்டுகள் மற்றும் பிற மருத்துவ பயன்பாட்டுக்காக பயன்படுத்தலாம். ஜெனரேட்டர் பொருத்தினால் பணி நிறைவடைந்து விடும். இதன் மூலம் கொரோனா காலம் மட்டுமில்லாமல், மற்ற காலங்களிலும் அவசர தேவைக்கு உதவியாக இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story