மாணவி பாலியல் பலாத்காரம்


மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 2 July 2021 9:45 PM IST (Updated: 2 July 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிளஸ்-2 மாணவி

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 26 வயது வாலிபர், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்து தனியார் தேயிலை தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் அவரது மனைவிக்கு 17 வயதில் தங்கை உள்ளார். பெற்றோர் இறந்துவிட்டதால், அந்த சிறுமி ஆத்தூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி கோத்தகிரியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு வந்து இருந்தார். 

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி அவரது அக்காள் கணவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் 2-வதாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

போக்சோவில் கைது

இதையடுத்து நேற்று முன்தினம் திடீரென அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் கோத்தகிரி போலீசுக்கும், சைல்டு லைன் அமைப்பினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமியை அவரது அக்காள் கணவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது உறுதியானது. உடனே அவரை பிடித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சைல்டு லைன் அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story