பள்ளிகொண்டாவில் போலீஸ் நிலையம் முன்பு ஓட்டல் உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி
பள்ளிகொண்டாவில் ஓட்டலுக்கு சீல் வைப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர் போலீஸ்நிலையம் முன்பு, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாபுபாய், அவரது மகன் அயாஸ் (வயது 27) ஆகிய இருவரும் ஓட்டல் மற்றும் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை, டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அணைக்கட்டு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில், வேப்பங்குப்பம் போலீசாருடன் பள்ளிகொண்டா பஜார் வீதியில நேற்று காலை 9 மணயளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முககவசம் அண்ந்துள்ளனரா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாபுபாய் கடையில் உள்ள ஊழியர்கள் முக கவசம் அணியாமல் வேலை செய்துகொண்டு இருந்ததாக தெரிகிறது. உடனே சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர் பாபுபாய்யை அழைத்தனர். அவர் முககவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது.
உடனே முககவசம் அணியாததால், அவருக்கு ரூ.200 அபராதம் விதிப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாபுபாய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ் ஒருவர் கடைக்கு சீல் வைத்து விடுவேன் என கூறி உள்ளார்.
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த பாபுபாய் விற்பனைக்காக வைத்திருந்த இனிப்பு மற்றும் கார வகைகளை கீழேகொட்டி அழித்தார். மேலும் அபராதம் விதிப்பதாகவும், சீல் வைப்பதாகவும் மிரட்டுவதாகக்கூறி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார். அதேபோன்று அவர் மீது தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் புகார் கொடுக்கசென்றனர்.
சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன், அதிகாரிகளையும், ஓட்டல் உரிமையாளரையும் அழைத்து விசாரணை நடத்தினார். தகவல் அறிந்து வந்த பாபுபாய் மகன் அயாஸ் வாரத்திற்கு இரண்டு முறை அதிகாரிகள் வந்து தொல்லை கொடுப்பதாகவும், அபராதம் விதிப்பதாக மிரட்டி வருவதாகவும் கூறி திடீரென கையில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பெட்ரோல் ஊற்றியதில் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார் யார் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்தசம்வத்தால் பள்ளிகொண்டாவில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story