மாவட்ட செய்திகள்

குருமலையில் 2 படுக்கைகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி. 3 நாட்களில் செயல்படும் என கலெக்டர் பேட்டி + "||" + Temporary hospital with 2 beds in Kurumalai

குருமலையில் 2 படுக்கைகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி. 3 நாட்களில் செயல்படும் என கலெக்டர் பேட்டி

குருமலையில் 2 படுக்கைகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரி. 3 நாட்களில் செயல்படும் என கலெக்டர் பேட்டி
வேலூரை அடுத்த குருமலையில், மலைகிராம மக்கள் வசதிக்காக 2 படுக்கைகளுடன்கூடிய தற்காலிக ஆஸ்பத்திரி 3 நாட்களில் செயல்படத்தொடங்கும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டம், ஊசூரை அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல், பள்ளக்கொல்லை உள்பட சில மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாலை வசதியில்லாததால் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதைகளை பயன்படுத்த வேண்டிய அவலநிலை காணப்படுகிறது. 

மலை கிராம மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதியும் இல்லை. பாம்புக்கடி, மாரடைப்பு, பிரசவ வலி உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவைக்கு பாதிக்கப்பட்டவரை டோலி கட்டியும், முதுகில் சுமந்துகொண்டும் மலையடிவாரத்துக்கு செல்லவேண்டும். அதற்குள் சில நேரங்களில் மரணம் நிகழ்ந்துவிடுகிறது.

டோலிகட்டி தூக்கி செல்லும் நிலை

2019-2020-ம் நிதியாண்டில், சிவநாதபுரம் கல்லாங்குளம் என்ற பகுதியிலிருந்து மலை கிராமங்களுக்கு செல்ல சாலை அமைக்க ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதுடன் சாலைப் பணி முடங்கியது. இந்தநிலையில், குருமலை கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் மனைவி பவுனுக்கு 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. 

அவரை டோலி கட்டி உறவினர்கள் மலையிலிருந்து கீழே கொண்டுவந்து, மலையடிவாரத்தில் இருந்து ஆட்டோவில் அழைத்துச் சென்ற போது பவுனுக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. அவசர சிகிச்சைக்கு  மருத்துவமனைகளுக்கு செல்ல மலைகிராம மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மலை கிராமங்களுக்கு விரைவாக சாலை வசதி, துணை சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று குருமலைக்கு கரடுமுரடான பாதையில் நடந்தே சென்று ஆய்வு செய்தார். அவருடன் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். குருமலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 படுக்கையுடன் ஆஸ்பத்திரி

குருமலை கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை டோலிகட்டி தூக்கிச் சென்றுள்ளனர். அவருக்கு ஆட்டோவில் செல்லும்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குருமலை கிராமத்தில் உடனடியாக மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக ஆய்வு செய்தேன். இந்த மலையில் குருமலை, நச்சுமேடு, ெவள்ளக்கல் மலை, பள்ளக்கொல்லை ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இங்கு 219 குடும்பங்களை சேர்ந்த 456 பேர் வசித்து வருகின்றனர்.
 
இவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படும் குழாயை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். மலையில் தற்காலிகமாக 2 படுக்கை வசதி கொண்ட ஆஸ்பத்திரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் காலை முதல் மாலை வரை டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். இந்த ஆஸ்பத்திரி இன்னும் 3 நாட்களில் செயல்பட தொடங்கும். குருமலைக்கு செல்லும் சாலை ஒரு இடத்தில் செங்குத்தாக உள்ளது. இதற்கு பதிலாக 500 மீட்டர் தூரத்தில் மாற்றுப்பாதை அமைக்கலாம் என என்ஜினியர்கள் தெரிவித்தனர்.

சாலை வசதி

ஆனால் பொதுமக்கள் விருப்பப்படி அதே இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் குருமலைக்கு சாலை வசதிகள் செய்யப்படும். மேலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலைக் கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் ரேஷன் கார்டு உள்ளதாக தெரிவித்தனர். விடுபட்டவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஊனமுற்ற ஒருவருக்கு உதவித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மலைப் பகுதிக்கு வந்து செல்ல ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும். இந்த மலை கிராமங்களுக்கு தேவையான மேம்பாட்டு பணிகள், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலட்சுமி, கனகவல்லி, அணைக்கட்டு தாசில்தார் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், கிராம வன குழுத் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் உடன் இருந்தனர்.