விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2,108 கோவில்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2,108 கோவில்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 July 2021 9:59 PM IST (Updated: 2 July 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 2,108 கோவில்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம், 

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவலை  கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவினால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. அதுபோல் வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர் நோய் தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கியதையடுத்து ஒவ்வொரு வாரமும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்டமாக 8-வது முறையாக மேலும் சில தளர்வுகளுடன் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில் நோய் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்களை 3 வகைகளாக வகைப்படுத்திய அரசு, வகை 3-ல் உள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாகவும், வகை 2-ல் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட 23 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாகவும் பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

கோவில்கள் திறப்பு

கடந்த முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி வகை 3-ல் உள்ள மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் கோவில்கள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கின்போது வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் கோவில்களை திறக்க அரசால் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை மறுநாள் முதல் மேற்கண்ட 23 மாவட்டங்களிலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்ப தற்போது கோவில்களை திறந்து சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சுத்தம் செய்யும் பணி

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 2,108 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கியதும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 2 மாவட்டங்களில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் வளாகம் மற்றும் அங்குள்ள சன்னதிகள், கருவறை, கோபுரம், கோவிலின் வெளிப்புற பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளி

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட உள்ளன. இதனால் வழிபாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவிலை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக அரசு வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் கைகளை நன்கு கழுவுவதற்கு வசதியாக கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் கிருமி நாசினி திரவம் வைப்பதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Next Story