விமானத்தில் 3 கோடி தங்கம் கடத்திய 6 பேர் கைது
விமானத்தில் 3 கோடி தங்கம் கடத்திய 6 பேர் கைது
கோவை
சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.3 கோடி தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் கடத்தல்
கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்தும், உள்நாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன.
இதில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தி வருகிறார்களா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் அரேபிய நாட்டுக்கு சொந்தமான ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.3 கோடி தங்கம்
இதற்கிடையே அந்த விமானம் நேற்று அதிகாலை 3.50 மணி அளவில் சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்கத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 6 பயணிகளை பிடித்து தனியாக அழைத்து சென்று அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் துணிகளுக்கு இடையில் தங்கத்தை பொடியாக்கி பசையில் கலந்து ஆடைகளின் உள்பகுதியில் ஒட்டி நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதில் இருந்த 6,117 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3கோடி ஆகும்.
6 பேர் கைது
இது குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆறுமுகம், காஜி அப்துல் அமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீனி இப்ராஹிம்ஷா ஆகியோர் என்பதும்
இவர்கள் கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், வேலூர், திட்டக்குடி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுவாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் தங்கத்தை கடத்தி வந்தால் கைது செய்யப்படுவார்.
தற்போது ரூ.3கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்ததால் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story