சமூக விரோதிகளின் கூடாரமாகும் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம்
விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் முக்கிய ரெயில்வே சந்திப்பாக விருத்தாசலம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு அருகிலேயே விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் அமைய பெற்றுள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் விருத்தாசலம்-திருச்சி மற்றும் மதுரை-விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில் நின்று செல்லும். இதன் மூலம் தினமும் அலுவல் பணிகளுக்காக சென்றவர்கள் மற்றும் சுற்றிலும் உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வந்தனர்.
பராமரிப்பு இல்லை
தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த பயணிகள் ரெயில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு பயணிகள்வருகை முற்றிலும் இல்லாமல் போனது. அதோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளும் முழுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது.
ஏனெனில் ரெயில்நிலையத்துக்கு வரும் சாலையும் செடி-கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பாதையே பாதி அளவுக்கு மறைந்த நிலையில் உள்ளது. மேலும் நடைபாதையில் இருந்த சிமெண்டு கற்கள் அனைத்தும் பெயர்ந்து போய்விட்டது. அதோடு, முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து வருகிறது.
நடவடிக்கை தேவை
ரெயில் நிலையத்தில் உள்ள அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தால், அந்த பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது. சூதாட்டம், மது அருந்தும் இடமாக மாறிவிட்டது.
மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறையும் உடைக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், ரெயில் நிலையம் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ஆகையால் ரெயில்வே அதிகாரிகள் இதில் துரிதமாக கவனம் செலுத்தி ரெயில் நிலையத்தை பராமரிக்க முன்வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story