கோவை ஆர்எஸ்புரம் ஆக்கி மைதானத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை


கோவை ஆர்எஸ்புரம் ஆக்கி மைதானத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 2 July 2021 5:00 PM GMT (Updated: 2 July 2021 5:00 PM GMT)

கோவை ஆர்எஸ்புரம் ஆக்கி மைதானத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் ஆக்கி மைதானத்தை உலகத்தரம் வாய்ந்தவகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

கோவை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆக்கி விளையாட்டு மைதானத்தை நேற்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து மைதானங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது

தமிழக அரசு விளையாட்டுத் துறையை துடிப்புமிக்க துறையாக உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.  

இதன்படி சர்வதேச விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்று, மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக அவர்களுக்கு  உயர் மட்ட செயல் திறன் பயிற்சி தமிழக அரசால் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறது.

ஆக்கி மைதானம்

விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் அறிவியல் ரீதியான பயிற்சி மேற்கொள்வதற்காக உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித்தரும். 

கோவை ஆர்.எஸ்.புரம் ஆக்கி மைதானத்தை  உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 மேலும் சென்னையை நவீன விளையாட்டு நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மெத்தனப்போக்கு

விளையாட்டு துறையை மேம்படுத்தி, தமிழக வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல செய்வது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாகும். 

கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 10 ஆண்டுகளாக  எந்தவித வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே கடந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்குக்கு எடுத்துக்காட்டு ஆகும். 

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் அங்கிருந்த தடகள விளையாட்டு வீரர்-வீராங்கனைகளிடம் கலந்துரையாடினார். 

அப்போது அவர்களுக்கு அரிசி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 

அவருடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story