மாவட்ட செய்திகள்

குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு தேனி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க முண்டியடித்த மக்கள் + "||" + People rushing to file a petition at the taluka office

குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு தேனி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க முண்டியடித்த மக்கள்

குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு தேனி தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க முண்டியடித்த மக்கள்
தேனி தாலுகா அலுவலகத்தில் குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு மனு அளிக்க சமூக இடைவெளியின்றி மக்கள் முண்டியடித்தனர்.
தேனி:
தேனி தாலுகா அலுவலகத்தில் குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு மனு அளிக்க சமூக இடைவெளியின்றி மக்கள் முண்டியடித்தனர். 
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, தேனி அருகே தப்புக்குண்டு, வடவீரநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் அருகே சிக்காச்சியம்மன் கோவில்மேடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 1,223 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவை பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. அதுபோல், உத்தமபாளையம் அருகே அப்பிப்பட்டி, தமனம்பட்டி, போடி பரமசிவன் கோவில் தெரு, வலசத்துரை சாலை, போ.மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் மொத்தம் 1,356 குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து இங்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நகர்ப்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் குவிந்தனர்
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய சொந்த வீடு இல்லாத பொது மக்களிடம் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வருகிற 7-ந்தேதி வரை இதற்கான மனுக்கள் பெறும் பணி நடக்கிறது.
இந்தநிலையில் தேனி தாலுகா அலுவலகத்தில் இத்திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்காக விண்ணப்பிக்க நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று குவிந்தனர். சமூக இடைவெளி இன்றி மக்கள் மனு அளிக்க முண்டியடித்தனர். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் இதுபோன்று மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கூடியது கொரோனா மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.