கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடிப்பு


கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடிப்பு
x
தினத்தந்தி 3 July 2021 12:18 AM IST (Updated: 3 July 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கவுரி பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

சிவகங்கை,

சிவகங்கை கவுரி பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

சிவகங்கை நகரில், மேலூர் ரோடு பகுதியில் சிவகங்கை கவுரி பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலம் உள்ளது. இந்்த நிலம் பல கோடி ரூபாய் மதிப்புடையது.இந்த நிலம் தொடர்பாக ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறப்பட்டது.  இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் 58 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வந்தார். அதனுள் அறையும் அமைத்து, இடத்தை சுற்றி முள்வேலியும் போடப்பட்டு இருந்தது.
வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டனர். பின்னர் அவர்கள் அந்த நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு எச்சரிக்கை பலகை வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் மீட்கப்பட்ட நிலத்தை பார்வையிட்டனர். அத்துடன் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

கட்டிடங்கள் இடிப்பு

இதைதொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மீட்கப்பட்டுள்ள நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புக்களை கடந்த 30-ந்தேதிக்குள் அகற்றி கொள்ளவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அதிகாரிகளே இடித்து அப்புறப்படுத்துவார்கள் என்று நோட்டீஸ் மூலம் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் நேற்று வரை கோவில் இடத்தில் இருந்த கட்டிடங்களை அகற்றவில்லை.
இதைதொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி, சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தாசில்தார் தர்மலிங்கம், வெட்டுடையார் காளியம்மன் கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன், நகர்  இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், அதிகாரிகள் அங்கு சென்றனர்.மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடந்தது. சில மணி நேரத்தில் அந்த கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலியின் ஒரு பகுதியையும் எந்திரங்கள் மூலம் பிடுங்கி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story