மாவட்ட செய்திகள்

714 மூட்டை நெல் பறிமுதல் + "||" + paddy and lorries seized

714 மூட்டை நெல் பறிமுதல்

714 மூட்டை நெல் பறிமுதல்
கூடுதல் விலைக்கு விற்பதற்காக வெளிமாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு 3 லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 714 மூட்டை நெல்லை போலீசார் பறிமுதல் செய்ததுடன் 3 டிரைவர்களை கைது செய்தனர்.
தஞ்சாவூர்;
கூடுதல் விலைக்கு விற்பதற்காக வெளிமாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு 3 லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 714 மூட்டை நெல்லை போலீசார் பறிமுதல் செய்ததுடன் 3 டிரைவர்களை கைது செய்தனர்.
நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப திறக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்வதால் உள்ளூரில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கலெக்டர் எச்சரிக்கை
வெளிமாவட்ட வியாபாரிகளிடம் நெல்லை விலைக்கு வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் நெல்மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வியாபாரிகள் நெல் கொண்டு வருவதை தடுக்கவும், அப்படி கொண்டு வரும் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்யவும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கீதா, முருகானந்தம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தஞ்சை மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 29-ந் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள லாரி எடைபோடும் நிலையம் எதிரே தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 200 மூட்டைகளில் 12 டன் நெல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
714 நெல் மூட்டைகள் பறிமுதல்
அதேபோல் செங்கிப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலின் எதிரே வாகன சோதனை செய்தபோது, அந்த வழியாக வந்த லாரியில் 234 மூட்டைகளில் 14.04 டன் நெல் இருந்தது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் வல்லம் பைபாஸ் பிரிவில் நடந்த தீவிர வாகன சோதனையின்போது ஒரு லாரியில் 280 மூட்டைகளில் 17.36 டன் நெல் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இந்த நெல் மூட்டைகள் கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து தஞ்சைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 3 லாரிகளில் இருந்து 714 மூட்டைகளில் 43.40 டன் நெல்லை தனிப்படையினர் பறிமுதல் செய்ததுடன், 3 லாரி டிரைவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது, வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, அவற்றை டெல்டா மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
3 டிரைவர்கள் கைது
அதைத்தொடர்ந்து லாரி டிரைவர்களான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த பால்பாண்டி(வயது 48), தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஓட்டத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (49), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மூங்கில்பாடி ரோட்டை சேர்ந்த குமார்(44) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே இதேபோல் கடந்த 28-ந் தேதி நடந்த சோதனையின்போது 7 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 120 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.