தடையை மீறி கோவில் திருவிழா; 450 பேர் மீது வழக்கு
களக்காடு அருகே தடையை மீறி கோவில் திருவிழா நடந்ததாக 450 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பரத்தில் பழமை வாய்ந்த நாராயணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஆனி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கடந்த ஆண்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடை உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் கூட்டம் இன்றி எளிமையான முறையில் கொடியேற்றப்பட்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே நேற்று 8-ம் திருநாளை முன்னிட்டு பரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றங்கரையில் பரிவேட்டை ஆடினார். பக்தர்கள் கூட்டம் இன்றி எளிமையான முறையில் வாகன பவனி தொடங்கியது. ஆனால் வாகனம் ஆற்றங்கரையை சென்றடைந்தபோது ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி கோவில் திருவிழா நடத்தியதாக 450 பேர் மீது களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story