கைதி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்; சபாநாயகர்-அமைச்சர் வழங்கினர்


கைதி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்; சபாநாயகர்-அமைச்சர் வழங்கினர்
x
தினத்தந்தி 2 July 2021 8:17 PM GMT (Updated: 2 July 2021 8:17 PM GMT)

கைதி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ரகுபதி ஆகியோர் வழங்கினர்.

நெல்லை:
பாளையங்கோட்டை சிறையில் கொல்லப்பட்ட கைதி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ரகுபதி ஆகியோர் வழங்கினர்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட கைதி முத்து மனோ குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி முத்து மனோவின் தந்தை பாவநாசம் மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் ரூ.10 லட்சம் நிவாரண நிதியை பாவநாசத்திடம் வழங்கினர். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை பெற்றுக்கொண்ட பாவநாசம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

நடவடிக்கை

பின்னர் அமைச்சர் ரகுபதி கூறுகையில், "பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்து மனோ உயிரிழந்த சம்பவம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. இதில் யார், யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். முத்துமனோ குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், ராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன்,  கணேஷ்குமார் ஆதித்தன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பொருளாளர் சேக் தாவூது, செங்கோட்டை நகர செயலாளர் ரகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story