138 மையங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்


138 மையங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 July 2021 8:22 PM GMT (Updated: 2 July 2021 8:22 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். கடந்த 29-ந் தேதி 132 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அன்று மட்டும் 21 ஆயிரத்து 370 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கும், 630 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்ப்பட்டது. மொத்தம் 22 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 1 லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டன.
பொதுமக்கள் ஏமாற்றம்
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் பொதுமக்கள் பலர் தினமும் சிறப்பு மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடப்படுகிறதா? என பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
138 மையங்களில் இன்று தடுப்பூசி 
இதற்கிடையே சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்துக்கு 53 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகள் கையிருப்பின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) 138 மையங்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
ஆகையால் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு முககவசம் அணிந்து செல்வதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story