குண்டுமல்லி கிலோ ரூ.160-க்கு விற்பனை சேலத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி பூ மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தல்


குண்டுமல்லி கிலோ ரூ.160-க்கு விற்பனை சேலத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி பூ மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 July 2021 1:52 AM IST (Updated: 3 July 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக சேலத்தில் பூக்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டை திறக்க வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம்
பூக்கள் விலை சரிவு
சேலம் மாவட்டத்தில் வீராணம், பனமரத்துப்பட்டி உள்பட பல இடங்களில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், அரளி என பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்படும் பூக்களை சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்ட வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வ.உ.சி. பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பலர் மாநகரில் ஆங்காங்கே சாலையோரத்தில் பூக்களை விற்று வருகின்றனர். கோவில்கள் திறக்கப்படாததாலும், திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் பூக்கள் விற்பனை குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குண்டுமல்லி
விஷேச நாட்களில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை கிலோ ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.160-க்கும், சன்னமல்லி ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.120-க்கும், கோழிக்கொண்டை, அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் தினமும் டன் கணக்கில் பூக்கள் வீணாகி மாநகராட்சி குப்பை வண்டிகளில் அள்ளப்பட்டு குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பூ விவசாயிகள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு வ.உ.சி. பூ மார்க்கெட்டை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story