2 பேரிடம் வழிப்பறி செய்த நபரை துரத்தி பிடித்த வாலிபர்கள்


2 பேரிடம் வழிப்பறி செய்த நபரை துரத்தி பிடித்த வாலிபர்கள்
x
தினத்தந்தி 3 July 2021 2:19 AM IST (Updated: 3 July 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் சினிமா பாணியில் 2 பேரிடம் வழிப்பறி செய்த நபரை இரு வாலிபர்கள் துரத்திபிடித்தனர். இதில் தொடர்புடைய இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவமொக்கா:
  
2 பேரிடம் வழிப்பறி

  சிவமொக்கா டவுனில் நந்தி பெட்ரோல் விற்பனை மையம் உள்ளது. இங்கு நேற்று ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களில் ஒருவன், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தவரின் செல்போன், ஏ.டி.எம். கார்டை பறித்தான்.

  பின்னர் 2 மர்மநபர்களும் தப்பி ஓடினர். அப்போது ஒருவன் அந்த வழியாக வந்த ராேஜஷ், மனோஜ் ஆகிய 2 பேரை கத்தி முனையில் மிரட்டி அவர்களது மோட்டார் சைக்கிளை பறித்தான். பின்னர் மர்மநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

ஒருவன் சிக்கினான்

  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராேஜஷ், மனோஜ் ஆகியோர் துரத்திச் சென்றனர். இதனால் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு மர்மநபர்கள் ஓடினர்.

  இதில் ஒருவனை 2 பேரும் சேர்ந்து மடக்கிப்பிடித்தனர். பின்னர் தர்மஅடி கொடுத்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த தொட்டபேட்டே போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிவமொக்கா ஷராவதி நகரை சேர்ந்த சிவ் என்பதும், தப்பி ஓடியவன் ஆனந்த் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்த்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 சிவமொக்காவில் நேற்று பகலில் சினிமா பாணியில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story