மாவட்ட செய்திகள்

பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி + "||" + agri

பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி

பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி
மடத்துக்குளம் பகுதியில் பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆரம்ப முதலீடு
மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே புடலை, பீர்க்கன், பாகல் போன்ற பந்தல் காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பந்தல் சாகுபடியை பொறுத்தவரை ஆரம்பகட்ட முதலீடு அதிக அளவில் தேவைப்படுவதால் பல விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் பந்தல் காய்கறிகள் சாகுபடி லாபகரமானதாகவே இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 
மடத்துக்குளம் பகுதியில் பந்தல் மூலம் புடலங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது:-
கொடி வகைப் பயிரான புடலங்காய் வேகமாக வளர கூடியது மட்டுமல்லாமல் அதிக மகசூல் தரக் கூடியதாகவும் உள்ளது. அத்துடன் சந்தைப்படுத்துவதும் எளிதாக இருக்கும் என்ற வகையில் புடலங்காய் சாகுபடியைத் தேர்வு செய்துள்ளோம். டிசம்பர்-ஜனவரி மற்றும் ஜூன்-ஜூலை மாதங்கள் புடலங்காய் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.
பழ ஈக்கள்
ஒரு ஏக்கரில் புடலை நடவு செய்ய 600 கிராம் முதல் 800 கிராம் வரை விதைகள் போதுமானதாகும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை ஊன்றியவுடன் பூவாளி அல்லது குடம் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைத்து விடும். செடி சற்று வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.
ஒவ்வொரு குழியிலும் நல்ல சீரான வளர்ச்சி உள்ள 3 நாற்றுக்களை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை பிடுங்கி விடலாம். செடி முளைத்து கொடியாக படர தொடங்கும் போது மூங்கில் குச்சிகள் உதவியுடன் பந்தலில் படர விட வேண்டும். புடலையில் பூசணி வண்டு மற்றும் பழ ஈக்களின் தாக்குதல் தென்பட்டால் தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனை பெற்று மருந்துகள் தெளிக்கலாம்.
மகசூல்
தற்போது இங்கு அதிக அளவில் பூக்கள் பிடித்துள்ளது.விதைத்து 80 நாட்கள் முதல் அறுவடை செய்யத் தொடங்கலாம்.ஒரு ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். பொதுவாக புடலங்காய்க்கு சீரான விலை கிடைத்து வருகிறது.இதனால் இது லாபகரமான பயிராகவே இருக்கும்.
முதல் முறை பந்தல் அமைப்பதற்கு முதலீடு செய்து விட்டால் பல ஆண்டுகள் இதனைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள முடியும்.பந்தல் அமைக்க அரசு மானியம் வழங்கும் சமயத்தில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு  அவர் கூறினார்.