கால்நடைத்துறை சார்பில் 74 குதிரைகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்


கால்நடைத்துறை சார்பில் 74 குதிரைகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 3 July 2021 12:06 PM IST (Updated: 3 July 2021 12:06 PM IST)
t-max-icont-min-icon

கால்நடைத்துறை சார்பில் 74 குதிரைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, 

மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் கொரோனா தொற்று தாக்குகிறது. சமீபத்தில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றுக்கு 2 சிங்கங்கள் பலியாகின. இதையடுத்து விலங்குகளை வனத்துறை, கால்நடைத்துறை கவனமாக கண்காணித்து வருகிறது.

தற்போது சென்னையில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து திருமணம் போன்ற ஊர்வல நிகழ்ச்சிகளில் மீண்டும் குதிரை பயன்படுத்தப்படுகிறது. தற்போது மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் மெரினா சவாரி குதிரைகளை அதன் உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் 74 குதிரைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி கிருத்திகா, தி.மு.க. பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் பங்கேற்ற குதிரைகளுக்கு தமிழ்நாடு கால்நடை துயர்துடைப்பு கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் கொரோனா உள்பட பரிசோதனைகளை மேற்கொண்டனர். காயத்தால் அவதிப்பட்ட குதிரைகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்ற குதிரைகளுக்கு இலவசமாக தீவனங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Next Story