தேனி அல்லிநகரம் நகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை


தேனி அல்லிநகரம் நகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 3 July 2021 11:40 AM GMT (Updated: 3 July 2021 11:40 AM GMT)

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருக்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் உலா வருகின்றன. குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
மேலும் நாய்கள் வெறிப்பிடித்து மக்களை கடித்து காயப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. நாய்கள் தொல்லையால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தது. இதனால் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்தது. கடந்த 2017-ம் ஆண்டு நகராட்சி பகுதியில் 1,500 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது.
கருத்தடை சிகிச்சை
எனவே நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி சார்பில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தோடு இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி 6 ஆண்டுகளுக்கு பிறகு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தேனி மேற்கு சந்தை வளாகத்தில் உள்ள நாய்களுக்கான காப்பகத்தில் நேற்று தொடங்கியது. கால்நடை டாக்டர் தமிழரசன் தலைமையிலான குழுவினர் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் நாகராஜன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த பணிகள் குறித்து சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்ட போது,"ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூ.700 வீதம் நகராட்சி நிர்வாகம் நிதி வழங்குகிறது. நாய்களை பிடித்து கருத்தடை செய்வது, வெறிநோய் தடுப்பூசி செலுத்துவது, 3 நாட்கள் அவற்றை காப்பகத்தில் வைத்து உணவு வழங்கி பராமரிப்பது, அதன் பிறகு அவை பிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கொண்டு சென்று விடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக 70 நாய்கள் பிடித்து வரப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு சுமார் 100 நாய்கள் வீதம் கருத்தடை செய்யப்பட்ட உள்ளது. நாய்கள் தொல்லை அதிகம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அப்பகுதிகளில் உள்ள நாய்களுக்கு முதற்கட்டமாக கருத்தடை செய்யப்படுகிறது" என்றார்.
நீண்ட காலத்திற்கு பிறகு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story