புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி


புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 July 2021 6:13 PM IST (Updated: 3 July 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழக-ஆந்திர எல்லையில் கனமழை பெய்ததால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாணியம்பாடி

தமிழக-ஆந்திர எல்லையில் கனமழை பெய்ததால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நதிநீர் ஒப்பந்தத்தை மீறி...

ஆந்திர மாநில அரசு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியது. அதில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திர மாநில அரசு அண்மையில் 5 அடியாக இருந்த தடுப்பணையை 13 அடியாக உயர்த்தி கட்டியது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியிலும், வாணியம்பாடி, அம்பலூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம் குப்பம், பெரும்பள்ளம் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

அணையை பார்க்கும் பொதுமக்கள்

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. அந்தத் தண்ணீர் தற்போது தமிழகத்துக்கு வரத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

புல்லூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வருவதையறிந்த ஏராளமான பொதுமக்கள் அணையை வந்து பார்த்துச் செல்கின்றனர்.

கலெக்டர் மலர்தூவி வரவேற்றார்

புல்லூர் தடுப்பணை  நிரம்பி வழிந்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை மற்றும் அதிகாரிகள் பாலாற்று ஆற்றுப்படுகை பகுதிகளையும், நீர்வரத்து வரும் பகுதிகளையும் பார்வையிட்டனர். 

தொடர்ந்து புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிவதை பார்வையிட்ட பின்னர் அங்கு தமிழகத்துக்கு தடுப்பணை வழியாக வெளியேறி வரும் நீரை மலர் தூவி வரவேற்றனர்.

Next Story