மாவட்ட செய்திகள்

செலவைக்குறைத்து மகசூலை அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம் + "||" + bodippatti

செலவைக்குறைத்து மகசூலை அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம்

செலவைக்குறைத்து மகசூலை அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம்
செலவைக்குறைத்து மகசூலை அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம்
போடிப்பட்டி:
செலவைக்குறைத்து மகசூலை அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம் கைகொடுப்பதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீணாகும் உரம்
தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வரப்பிரசாதமாக சொட்டுநீர்ப்பாசனம் உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாகாமல் பயிர்களுக்குக் கொண்டு சேர்க்க முடிவதுடன், குறைந்த அளவு நீரில் அதிக பரப்பளவில் பாசனம் மேற்கொள்ள முடிகிறது. இந்தநிலையில் பயிருக்குத் தேவையான உரங்களை தண்ணீரில் கலந்து சொட்டுநீர் பாசனக்குழாய்கள் மூலம் பயிர்களின் வேர்களுக்கே கொண்டு சேர்க்கும் உத்திதான் சொட்டு நீர் உரப்பாசனம் எனப்படுகிறது.
இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
உரங்களை நேரடியாக மண்ணில் இடும்போது அதில் சுமார் 50 சதவீதம் சத்துக்கள் தான் பயிர்களுக்கு சென்று சேர்க்கிறது. மீதமுள்ளவை மண்ணில் கலந்து வீணாவதுடன் மண்ணிலேயே தங்கி மண்ணின் தன்மையை மாற்றவும் கூடும். அதேநேரத்தில் சொட்டு நீர் உரப்பாசனம் மூலம் நீரில் கரையும் உரங்கள் அல்லது திரவ உரங்களை அளிக்கும் போது 80 சதவீதம் முதல் 90 சதவீத பயிர்களைச் சென்றடைகிறது. எனவே பயிருக்குத் தேவையான உர அளவினை துல்லியமாகக் கணக்கிட்டு அளிக்க முடிவதால் உரத்துக்கான கூடுதல் செலவு தவிர்க்கப்படுகிறது.
கரைதிறன்
பொதுவாக பயிர்களுக்கு, விதைக்கும் போது மணிச்சத்தும், வளர்ச்சிப் பருவத்தில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தும், முதிர்ச்சிப் பருவத்தில் சாம்பல் சத்தும் அதிகமாக தேவைப்படும். இவ்வாறு பயிரின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவங்களில் தேவைப்படும் உரங்களை துல்லியமாக சொட்டுநீர் உரப்பாசனத்தின் மூலம் அளிக்க முடியும். இந்த முறையில் அனைத்து செடிகளுக்கும் உரமும் நீரும் சீராக பகிர்ந்தளிக்கப்படுவதால் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இந்த முறையின் மூலம் நீர் சேமிப்போடு, ஆள் கூலி, மின்சாரம், உரம் ஆகியவையும் சேமிக்கப்படுகிறது. 
பொதுவாக சொட்டுநீரில் கலந்து அளிக்கப்படும் உரங்கள் எளிதில் கரையும் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். மோனோ பொட்டாசியம் பாஸ்பேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் மெக்னீசியம் சல்பேட் போன்றவை 100 சதவீதம் நீரில் கரையும் தன்மை கொண்டவை. 
இதுபோல பொட்டாசியம் நைட்ரேட், கால்சியம் நைட்ரேட் போன்றவை 80சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கரையும் தன்மை கொண்டவை. அம்மோனியம் பாலி பாஸ்பேட், சூப்பர் பாஸ்பாரிக் அமிலம் போன்றவை 70 சதவீதம் கரைதிறன் கொண்டவை. பொதுவாக 70 சதவீதத்துக்கு மேல் கரைதிறன் கொண்ட உரங்களைமட்டுமே சொட்டு நீர் உரப் பாசனத்துக்குப் பயன்படுத்துவது நல்லது.
நுண்ணூட்ட உரங்கள்
பயிர்களுக்கான மணிச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய பாஸ்பாரிக் அமிலம், மோனோ அம்மோனியம் பாஸ்பேட், டை அம்மோனியம் பாஸ்பேட் போன்றவற்றை பயன்படுத்தலாம். சாம்பல் சத்துக்கு பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட், பொட்டாசியம் பாஸ்பேட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நுண்ணூட்ட உரங்களான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம் போன்றவற்றையும் பாசன நீரில் கலந்து அளிக்கலாம். 
சூப்பர் பாஸ்பேட் உரத்தை சொட்டு நீரில் அளிக்கமுடியாது. அதற்கு மாற்றாக டை அம்மோனியம் பாஸ்பேட், மோனோ பொட்டாசியம் பாஸ்பேட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மேலும் சொட்டு நீர் உரப்பாசனம் குறித்த சந்தேகங்களுக்குஉடுமலை தோட்டக்கலை துறையினரைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு  அவர் கூறினார்.