விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம்,
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்தது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
இதனால் சாலைகளில் மழைநீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக விழுப்புரம் திரு.வி.க. சாலை, நேருஜி சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதுபோல் தாழ்வான பகுதிகளான சித்தேரிக்கரை, மணிநகர், கம்பன் நகர், ஆசிரியர் நகர், கே.கே. நகர், சுதாகர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதுமட்டுமன்றி விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கியது. உடனே நேற்று காலை நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின் மோட்டார் மூலம், தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இரவில் இதமான குளிர்ந்த காற்று வீசியது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதேபோல் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் விக்கிரவாண்டி, செஞ்சி, கெடார், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், வானூர், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. கத்திரி வெயில் காலம் முடிந்த பிறகும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கோடையை குளிர்விக்கும் விதமாக தற்போது பெய்து வரும் மழையினால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story