திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு, ஏரி, குளங்கள் கழிவுநீரால் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு, ஏரி, குளங்கள் கழிவுநீரால் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு, ஏரி, குளங்கள் கழிவுநீரால் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறினார்.
சுற்றுச்சூழல் மேம்பாடு ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் தொழிற்சாலை சங்க நிர்வாகிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நொய்யல் ஆறு
கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:-
தொழில் துறையில் சிறப்பான இடத்தில் முன்னணியில் இருக்கக்கூடிய மாவட்டமாக திருப்பூர் திகழ்கிறது. தொழில்துறைக்கான மேம்பாட்டு வசதிகள், அதற்கான திட்டங்கள், அதில் முதலீடு செய்கிற பல்வேறு தொழில் முனைவோர்கள் இவற்றையெல்லாம் கடந்து மற்ற தொழில் சார்ந்த விவசாயிகள், வியாபாரிகள் என ஒட்டுமொத்தமாக இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கையை பாதுகாக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வருகிற 2031-ம் ஆண்டு வரை பத்தாண்டு காலத்தில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதை மக்கள் இயக்கமாக மாற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. காரணம் இந்த பத்தாண்டு கால சுற்றுச்சூழல் மாற்ற அடிப்படையில் காலநிலை மாற்றத்தில் மிக மிக மோசமான விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நொய்யல் ஆறு மற்றும் ஏரி, குளங்கள் கழிவுநீரால் மாசுபடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்று நட வேண்டும்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2,000 என்று இருந்த நிலையில் தற்போது 300 கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற நிலைகள் மாறி அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகவும், ஆக்சிஜன் அளவு நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைக்குப் போக உபரியாகவும் உள்ளது.
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் அதிகளவு அந்நிய செலாவணி ஈட்டித் தரக்கூடிய நகரமாக உள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். அவர்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. சாயக்கழிவு அதிக அளவில் வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபட்டதால் சாய ஆலைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியால் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து சுற்றுச் சூழல் பாதிக்காதவாறு சாயக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது என்ற நிலையை அடைந்தது. பின்னலாடை நிறுவனங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதுபோல் சாயபட்டறைகள் அன்றாட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். பூமியை பசுமை நிலப்பரப்பாக மாற்ற நாம் மரக்கன்றுகளை நட்டு எதிர்கால தலைமுறையினருக்கு வளமான சமுதாயத்தை உருவாக்கி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
இதைத்தொடர்ந்து சமூக நலத்துறையின் சார்பில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 5 பெண்களுக்கு தலா ரூ.8,500 மதிப்பில் தையல் எந்திரங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள். முன்னதாக திருப்பூர் முருகம்பாளையம் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சாயப்பட்டறையில் சாயக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தார்கள்.
இதில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, கோவை மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணகுமார் (திருப்பூர் வடக்கு), சாமிநாதன் (திருப்பூர் தெற்கு), தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராம கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ், பொருளாளர் செந்தூர் முத்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story