மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு வழங்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழும் -அமைச்சர் செந்தில்பாலாஜி


மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு வழங்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழும் -அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 3 July 2021 4:57 PM GMT (Updated: 3 July 2021 4:57 PM GMT)

மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு வழங்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டல மின்வாரியத்துறை சார்பில் மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

மின்மிகை மாநிலமாக

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கவும், மக்களை காப்பாற்றவும் போர்க்கால அடிப்படையில் சுற்றி சுழன்று பணியாற்றியதோடு அரசு எந்திரத்தையும் சுழல வைத்து ஒரே மாதத்தில் கொரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகம் மின்தடை இல்லாத மாநிலமாகவும், மின் மிகை மாநிலமாகவும் இருக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நமக்கான மின் தேவையில் மின் உற்பத்தியில் 3-ல் 1 பங்கை தமிழக அரசும், மற்றொரு பங்கை மத்திய அரசும், எஞ்சியிருக்கிற 1 பங்கை தனியாரிடம் இருந்தும் பெற்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மின்வாரியத்திற்கு இழப்பு

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நிர்வாகத்திறமை இல்லாத காரணத்தினால் மின்வாரியம் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை வட்டியாக செலுத்தப்பட்டு வருகிறது. 
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மின்வாரியத்தில் எந்தவொரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, மின் தேவை உச்சத்தில் இருந்தது. குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் இருந்தும் அதிக விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதை இழப்பு என்று சொல்லமாட்டேன், ஊழல் என்று குற்றம்சாட்டுகிறேன். 

கூடுதல் பணிகள்

கடந்த ஆட்சியில் 9 மாதங்கள் மின்வாரியத்தில் எந்தவித பராமரிப்பு பணிகளும் செய்யவில்லை. ஆனால் தற்போது 10 நாட்கள் மின்வாரியம் எடுத்துக்கொள்ளப்பட்ட 2 லட்சத்து 28 ஆயிரம் பணிகளில் 2 லட்சத்து 70 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட பணிகளை விட கூடுதலாக 42 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மண்டலத்தில் மட்டும் 30,923 பணிகள் திட்டமிடப்பட்ட நிலையில் 2 ஆயிரம் பணிகள் கூடுதலாக மொத்தம் 32,021 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் விஷன் 2023 என்ற திட்டத்திற்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அதில் மின்வாரியத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட ரூ.4.50 லட்சம் கோடியில் நீங்கள் மின்வாரியத்திற்கு பயன்படுத்திய நிதி அளவு, என்ன திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்று கேட்டேன். இதுவரை அதற்கு பதில் கூறவில்லை. வெறும் பெயரளவுக்குத்தான் இந்த அறிவிப்பு, எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வட்டிக்கு வட்டி வாங்கி வட்டி கட்டியுள்ளனர்.

விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு 

24 மணி நேரமும் பணியாற்றக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். மின் தடையே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை நாம் உருவாக்கிட வேண்டும். அதற்கு எல்லோரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணியாற்றுங்கள். 
மின்வாரியத்தில் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மின் ஆளுமைக்கான விருது வழங்க வேண்டும் என்பதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வரும் காலங்களில் ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். 

அதுபோல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு வழங்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழும். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story