நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை: சப்-கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்காத பொது தீட்சிதர்கள் முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் பாதியிலேயே முடிந்தது


நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை: சப்-கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்காத பொது தீட்சிதர்கள் முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் பாதியிலேயே முடிந்தது
x
தினத்தந்தி 3 July 2021 5:23 PM GMT (Updated: 3 July 2021 5:23 PM GMT)

நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா முன்னேற்பாடு குறித்து சப்-கலெக்டர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பொது தீட்சிதர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் முடிவுகள் ஏதும் எடுக்காமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

சிதம்பரம், 

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு  ஆனிதிருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் தேரோட்டம் 14-ந்தேதியும், 15-ந்தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.  

தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்துளள்து. நாளை (திங்கட்கிழமை) முதல் கோவில்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆனிதிருமஞ்சன விழாவில் பக்தர்கள் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் விழா ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று காலை சிதம்பரத்தில் சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர்  மதுபாலன் தலைமை தாங்கினார்.

சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையாளர் அஜித்தா பர்வின், சிதம்பர நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் குமார், மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தீட்சிதர்கள் பங்கேற்கவில்லை

ஆனால், கோவில் பொது தீட்சிதர்கள் தரப்பில் கூட்டத்தில் யாரும் பங்கேற்க வில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தரப்பில் அழைப்பு விடுத்துள்ளனர். இருப்பினும் அவர்கள் பங்கேற்காமல் இருந்தனர். கூட்டம் தொடங்கிய பின்னரும் வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கோவிலுக்கு சென்று பொது தீட்சிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஆனாலும் அவர்கள் பங்கேற்க வரவில்லை. தீட்சிதர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால், சப்-கலெக்டர் மதுபாலன் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

வழிகாட்டு நெறிமுறைகள்

பின்னர் அங்கு வந்த பொது தீட்சிதர்களில் சிலர் சப்-கலெக்டர் மதுபாலனை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். இதுகுறித்து சப்-கலெக்டர் மதுபாலனிடம் கேட்ட போது, அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி திருவிழாக்கள், கும்பாபிஷேகம் ஆகியன நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே அதை பின்பற்றி விழாவை நடத்திட வேண்டும் என்று தீட்தர்களிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

அதேபோல், தீட்சிதர்கள் தரப்பில் கேட்ட போது, நாங்கள் கோவிலில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தினோம், அதை முடித்துக்கொண்டு சப்-கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க சென்றோம், ஆனால் அதற்குள் அங்கு நடந்த கூட்டம் முடிந்துவிட்டதால், அதில் எங்களால் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். 

பக்தர்கள் ஏமாற்றம்

இதன் மூலம் கோவில் திறக்கப்பட்டாலும், ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகவே மாறி உள்ளது. அதே நேரத்தில் இதில் தெளிவான முடிவுகள் வெளியாகமல் இருப்பது பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story