தமிழகத்தில் முதல் முறையாக பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி


தமிழகத்தில் முதல் முறையாக பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 3 July 2021 5:31 PM GMT (Updated: 3 July 2021 5:31 PM GMT)

தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விருத்தாசலம், 

தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உழவா் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,

 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தி.மு.க. இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். 


கொரோனா சிகிச்சை மையம்

அதனை தொடர்ந்து பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னா் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். 

அதை தொடா்ந்து திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் குழுவினர் மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 50 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். 

இதேபோல் திட்டக்குடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் உள்பட மொத்தம் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா மேம்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தையும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விருத்தாசலம் மருத்துவமனை விாிவாக்கம்

இதையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள், அங்கு பணிபுாியும் டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழில் தலைமையிலான மருத்துவ குழுவினர்,

 மருத்துவமனைக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தி மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தனா்.


அதனை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் விரைவில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி கொடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், கொரோனா வார்டில் தங்கியுள்ள நோயாளிகளின் விவரங்களை கேட்டறிந்தனர். 

பொதுமக்களிடம் மனு

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 
இதில் ரமேஷ் எம்.பி., நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், சப்-கலெக்டர் அமித்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Next Story