அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
கோத்தகிரி அருகே அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. அப்போது வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. அப்போது வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரடிகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி அந்த கிராமம் உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அதாவது கோவில், பேக்கரி, பள்ளி உள்ளிட்ட இடங்களில் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. எனவே அந்த கரடிகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
இதை ஏற்று கடந்த மாதம் வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு கரடி சிக்கியது. அதன்பிறகு கரடி குட்டி ஒன்று பிடிபட்டது. ஆனால் தாய் கரடி கூண்டை உடைத்து குட்டியை மீட்டு சென்றது.
கூண்டை சுற்றி வந்த குட்டி
அதன்பிறகும் கரடிகள் அட்டகாசம் தொடர்ந்தது. இதனால் மீண்டும் அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய் கரடி சிக்கியது. மேலும் அதன் குட்டி அருகில் சுற்றி வந்தது. மேலும் அவை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டன. இதை அறிந்த கிராம மக்கள் வேடிக்கை பார்க்க திரண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கரடி குட்டி அங்கிருந்து சென்றது.
பின்னர் நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வன அலுவலர் சரவண குமார், வனச்சரகர்கள் சரவணன், சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து கூண்டில் சிக்கிய கரடியை பார்வையிட்டனர். அப்போது கூண்டின் கீழ்பகுதியில் உள்ள மரப்பலகையை உடைத்து தரையில் குழி தோண்டி தப்பி செல்ல கரடி முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அடர்ந்த வனப்பகுதியில்...
உடனே கால்நடை டாக்டர்கள் அசோகன்(கோவை), ராஜேஷ்(முதுமலை), ராஜன்(கோத்தகிரி) ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களது ஆலோசனையின்பேரில் மற்றொரு கூண்டு கொண்டு வரப்பட்டு, அதில் கரடியை மாற்றி வாகனத்தில் ஏற்ற திட்டமிடப்பட்டது. இது தோல்வியடைந்தால் மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஜெகதளாவில் இருந்து மற்றொரு கூண்டு கொண்டு வரப்பட்டு, ஏற்கனவே உள்ள கூண்டுடன் இணைத்து கட்டப்பட்டது. பின்னர் கதவுகள் திறந்து விடப்பட்டு தீப்பந்தம் காட்டி கரடியை புதிய கூண்டுக்கு வனத்துறையினர் மாற்றினர். தொடர்ந்து கரடியை கூண்டுடோடு வாகனத்தில் ஏற்றி அப்பர் பவானி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story