காட்டு யானை விரட்டியதால் சாலையோர பள்ளத்தில் குதித்து உயிர் தப்பிய தந்தை-மகள்


காட்டு யானை விரட்டியதால் சாலையோர பள்ளத்தில் குதித்து உயிர் தப்பிய தந்தை-மகள்
x
தினத்தந்தி 3 July 2021 7:21 PM GMT (Updated: 3 July 2021 7:21 PM GMT)

கொடைக்கானல் அருகே காட்டு யானை விரட்டியதால் சாலையோர பள்ளத்தில் குதித்து தந்தை, மகள் உயிர் தப்பினர்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், புலியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இதில் ஒற்றை காட்டு யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அத்துடன் வீடுகளையும், பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் காட்டு  யானையை விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை அஞ்சூரான்மந்தை என்ற கிராமத்தை சேர்ந்த ராமராஜ் (வயது 48) என்பவர் தனது மகள் மோகனப்பிரியாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக உலா வந்த ஒற்றை காட்டு யானை அவர்களை மறித்து விரட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமராஜூவும், மோகனப்பிரியாவும் யானையிடம் இருந்து தப்பி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையோர பள்ளத்தில் குதித்து அங்கு பதுங்கிகொண்டனர். இதனையடுத்து அந்த காட்டு யானை, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டது. அதன்பிறகு அங்கிருந்து தந்தை, மகள் வெளியே வந்தனர். காயம் அடைந்த அவர்களுக்கு பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story