சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 4 July 2021 1:15 AM IST (Updated: 4 July 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் 2 பேரை தேடிவருகின்றனர்.

அருமனை, 
அருமனை அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் 2 பேரை தேடிவருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் வீடு
குமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் செலின் குமார் (வயது 50). இவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார்.
இந்தநிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமார் வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமாரும், அக்கம் பக்கத்தினரும் வெளியே ஓடி வந்தனர்.
வாகனங்கள் தீப்பிடித்தது
அங்கு வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், கார் தீப்பற்றி எரிந்ததை கண்டு செலின்குமார் திடுக்கிட்டார். உடனே அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் மோட்டார் சைக்கிள் முழுமையாக கருகி நாசமானது. காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்மநபர்கள் 2 பேர் நாசவேலையில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் பதிவாகியிருந்தது. 
அதாவது, அந்த காட்சியில் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கவச உடை அணிந்தபடி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெளியே நின்றபடி திடீரென அவருடைய வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டை வீசுகிறார்கள். அந்த குண்டு மோட்டார் சைக்கிள், கார் மீது விழுந்து வெடிக்கிறது. குபீரென வாகனங்களும் தீப்பற்றி எரிகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் நினைத்த காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிய மர்மநபர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி செல்கிறார்கள். ஆனால் அவர்களின் முகம் சரிவர கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு   விசாரணை
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் சம்பவம் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமாரிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் விசாரணை நடத்தினார்.
குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது செலின்குமார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, இந்த செயலில் மர்மநபர்கள்  ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாமா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பரபரப்பு
மேலும் இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story