பெங்களூரு புறநகரில் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை


பெங்களூரு புறநகரில் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 4 July 2021 1:57 AM IST (Updated: 4 July 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 3-வது அலை பாதிப்பில் இருந்து தப்பிக்க பெங்களூரு புறநகரில் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 500 பேர் பல்வேறு உடல் நலப்பாதிப்பால் அவதிப்படுவது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

கொரோனா 3-வது அலை

  நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை குறைய தொடங்கி உள்ளது. ஆனாலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக கொரோனா 3-வது அலையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள், நிபுணர்கள் கூறி வருகிறார்கள். இதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தற்போதில் இருந்தே அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கிராமங்களை நோக்கி குழந்தைகள் நல டாக்டர்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் நல டாக்டர்கள், பெங்களூரு புறநகரில் உள்ள கிராமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, அவர்களுக்கு இருக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து அறிந்து, கொரோனாவில் இருந்து பாதுகாக்க சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

46 ஆயிரம் குழந்தைகளுக்கு...

  பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 6 வயதுக்கு உட்பட்டதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கிராமங்களை நோக்கி குழந்தைகள் நல டாக்டர்கள் திட்டத்தின் கீழ் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் மட்டுமின்றி, குழந்தைகளுக்கு இருக்கும் மற்ற உடல் நல பாதிப்பு குறித்தும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு வந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அந்த நோய்களுக்கு தற்போதே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  அதன்படி, 46 ஆயிரம் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 114 குழந்தைகள் இதய பாதிப்பு, 15 குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்சினை, 290 குழந்தைகள் மற்ற உடல் நல பாதிப்பு என ஒட்டு மொத்தமாக 500-க்கும் மேற்பட்டோர் சில உடல் நல பாதிப்புகளால் அவதிப்படுவதை டாக்டா்கள் கண்டுபிடித்துள்ளார்.
  இதற்காக அந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story