மாவட்ட செய்திகள்

பெல்லந்தூரில் அரசு நிலம் விடுவிப்பு: எடியூரப்பா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு + "||" + The case against Edyurappa should be re-investigated

பெல்லந்தூரில் அரசு நிலம் விடுவிப்பு: எடியூரப்பா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு

பெல்லந்தூரில் அரசு நிலம் விடுவிப்பு: எடியூரப்பா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு
பெல்லந்தூரில் அரசு நிலத்தை விடுவித்ததாக முதல்-மந்திரி எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி போலீசாருக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
  
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு

  கர்நாடக முதல்-மந்திரியாக இருந்து வரும் எடியூரப்பா, இதற்கு முன்பு கடந்த 2000-2001-ம் ஆண்டில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக இருந்திருந்தார். அப்போது பெங்களூரு பெல்லந்தூரில் அரசு நிலம் 4.50 ஏக்கர் நிலத்தை எடியூரப்பா விடுவித்திருந்தார்.
  இவ்வாறு அரசு நிலத்தை விடுவித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வாசுதேவ் ரெட்டி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டில் லோக்-ஆயுக்தா கோர்ட்டில் எடியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இதுகுறித்து லோக்-ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி மாதம், பெல்லந்தூரில் அரசு நிலத்தை விடுவித்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக போதுமான சாட்சி, ஆதாரங்கள் இல்லை என்றும், அதனால் எடியூரப்பா குற்றமற்றவர், அவர் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி லோக்-ஆயுக்தா கோர்ட்டில், ‘பி’ அறிக்கையை லோக்-ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்திருந்தார். இதன் காரணமாக எடியூரப்பா நிம்மதி அடைந்திருந்தார்.

‘பி’ அறிக்கை தள்ளுபடி

  ஆனால் லோக் ஆயுக்தா போலீசாரின் நடவடிக்கை எதிர்த்து, பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் வாசுதேவ் ரெட்டி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

  இந்த நிலையில், நேற்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது பெல்லந்தூரில் அரசு நிலத்தை விடுவித்த வழக்கில் எடியூரப்பா குற்றமற்றவர் என லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்திருந்த ‘பி’ அறிக்கையை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீண்டும் விசாரிக்க உத்தரவு

  மேலும் பெல்லந்தூர் நில விடுவிப்பு வழக்கை போலீசார் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை நடத்துவதில் இனியும் காலதாமதம் செய்ய கூடாது.

  விசாரணை நடத்துவதற்காக போலீசார் நீண்ட நேரத்தை எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. விரைவில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.