சிக்கிம் மாநிலத்தில் விபத்தில் பலியான லால்குடி ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்; அமைச்சர்கள், கலெக்டர் நேரில் அஞ்சலி


சிக்கிம் மாநிலத்தில் விபத்தில் பலியான லால்குடி ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்; அமைச்சர்கள், கலெக்டர் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 3 July 2021 8:56 PM GMT (Updated: 3 July 2021 8:56 PM GMT)

சிக்கிம் மாநிலத்தில் நடந்த விபத்தில் பலியான லால்குடியை சேர்ந்த ராணுவ வீரர் தேவஆனந்தின் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், கலெக்டர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

லால்குடி,
சிக்கிம் மாநிலத்தில் நடந்த விபத்தில் பலியான லால்குடியை சேர்ந்த ராணுவ வீரர் தேவஆனந்தின் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், கலெக்டர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

லால்குடி ராணுவ வீரர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் மணகொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ்-ராஜம்மாள் தம்பதி. இவர்களது மகன் தேவஆனந்த் (வயது 24). கடந்த 2014-ம் ஆண்டு ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். 

இவர் சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் உள்ள மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் இருந்த தேவஆனந்த் உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் கடந்த மாதம் 30-ந்தேதி பணியை முடித்து ராணுவ டிரக்கில் கீழே உள்ள முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

விபத்தில் பலி

அப்போது திடீரென டிரக் மலையில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தேவஆனந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவலை ராணுவ அதிகாரிகள் தேவஆனந்த் குடும்பத்திற்கு தெரிவித்தனர்.

இதைக்கேட்ட அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி சிவா எம்.பி., தேவஆனந்த் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தகவல் கொடுத்தார். 

அமைச்சர்கள் அஞ்சலி

இதையடுத்து தேவஆனந்த் உடல் சிக்கிமில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சாலை மார்க்கமாக சொந்த ஊருக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. தேவ ஆனந்த் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் கதறி அழுதனர். 

பின்னர் தேவஆனந்த் உடலுக்கு ராணுவ கேப்டன் திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் குஜரால் சேனாமெடல் உள்பட ராணுவ அதிகாரிகள் தேசியகொடியை போர்த்தி மலர்வளையம் வைத்து ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிராம மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்.பி., சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் தேவஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

அடக்கம்

இதைத்தொடர்ந்து அவருடைய உடலுக்கு அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டது. பின்னர் தேவஆனந்தின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை எடுத்து, அவருடைய தாயார் ராஜாம்மாளிடம் கேப்டன் குல்தீப்ராணா கொடுத்தார்.

இதையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் பேண்டு வாத்தியங்கள் முழங்க தேவஆனந்த் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தேவஆனந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Next Story