மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி - கணவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி - கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 July 2021 10:13 AM IST (Updated: 4 July 2021 10:13 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புதுப்பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

மாமல்லபுரம்,

சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சதாம்உசேன் (வயது 26). இவருக்கும் சமினாநாத் (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமண தம்பதி இருவரும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் உள்ள மசூதிக்கு சென்றனர். அங்கு தொழுகை நடத்திவிட்டு மாமல்லபுரம் நோக்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வலது பக்கமாக இ.சி.ஆர். சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் புதுமண தம்பதி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இரு சக்கர வாகனத்தில் வந்த சமீனாநாத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு புறம் சாலையில் விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சதாம்உசேனை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Next Story