வணிக வளாகங்கள், பூங்காக்கள், ஓட்டல்கள் திறப்பு: மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரம்
சென்னையில் வணிக வளாகங்கள், பூங்காக்கள், ஓட்டல்கள் திறக்கப்படுவதால், மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நாளை (5-ந்தேதி) முதல் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது.
பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
சென்னையில் வணிக வளாகங்கள், பூங்காக்கள், ஓட்டல்கள் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் 30 அமலாக்க குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் கூடுதலாக குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கோயம்பேடு மார்க்கெட்டிலும் போலீசார் மூலம் தடுப்புகள், உயர் கோபுரங்கள் அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘தற்போது கொரோனா தொற்று குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இது அப்படியே தொடர வேண்டுமானால், பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாளை முதல் மாநகராட்சி, காவல்துறை, வருவாய்துறை சேர்ந்து, சென்னையில் கூட்டம் அதிகம் சேரும் 20 இடங்களில் முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்கப்படும்’ என்றார்
இந்த கூட்டத்தில் சென்னை கலெக்டர் டாக்டர் ஜெ.விஜயராணி, கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் செந்தில் குமார், டாக்டர் என்.கண்ணன், மாநகராட்சி துணை கமிஷனர் விஷூமகாஜன், வட்டார துணை கமிஷனர்கள் சிம்ரன்ஜீத் சிங் கலான், ஷரண்யா அரி, போலீஸ் துணை கமிஷனர்கள், மாநகர வருவாய் அலுவலர், வணிகர் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story