மாவட்ட செய்திகள்

திருமருகல் அருகே இருதரப்பினர் இடையே மோதல்: ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் வீடு, மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைப்பு + "||" + Conflict between the two sides Retired Village Assistant House, Motorcycles Beating and breaking

திருமருகல் அருகே இருதரப்பினர் இடையே மோதல்: ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் வீடு, மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைப்பு

திருமருகல் அருகே இருதரப்பினர் இடையே மோதல்: ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் வீடு, மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைப்பு
திருமருகல் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளரின் வீடு, மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திட்டச்சேரி, 

திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது65). ஓய்வுபெற்ற கிராம உதவியாளர். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் (54) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் மனைவி மங்கையர்கரசிக்கும், ராஜேந்திரன் மனைவி கமலாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு வந்த ராஜேந்திரனின் சகோதரர் சேகர் மனைவி ராஜேஸ்வரி (38) என்பவரும், கமலாவும் சேர்ந்து மங்கையர்கரசியை தாக்கி உள்ளனர். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (32) அவர்களை தடுத்துள்ளார். அவரையும் கற்களால் தாக்கி உள்ளனர். மங்கையர்கரசி தரப்பினரும் அவர்களை தாக்கியுள்ளனர்.

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த 4 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்த தகவல் அறிந்த கோவிந்தராஜின் உறவினர்கள் அவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இதை பார்த்த ராஜேந்திரன் தரப்பினர், வெளியூரில் இருந்து அடியாட்களை கோவிந்தராஜ் வரவழைத்து இருப்பதாக நினைத்து கொண்டு அவரது உறவினர்களையும் தாக்கி உள்ளனர்.

மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களையும் , கோவிந்தராஜ் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், குடிநீர் இணைப்பு குழாய்கள், கண்ணாடி ஆகியவற்றை உருட்டு கட்டை, கடற்பாரையால் அடித்து உடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினர் இடையே நடந்த மோதலை தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் ராஜேந்திரன் தரப்பில் 6 பேர் மீதும், கோவிந்தராஜ் தரப்பில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் திருமருகல் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன், தொகுதி துணை செயலாளர் சுரேஷ், வணிகர் அணி தொகுதி அமைப்பாளர் இளமாறன்,துணை அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ராஜேந்திரன் தரப்பினர் திருக்கண்ணப்புரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.