ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தீவிரம்


ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 July 2021 4:21 PM GMT (Updated: 4 July 2021 4:21 PM GMT)

ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், விசைப்படகுகளும் உள்ளன. கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்படும் படகுகள் கடல் சீற்றம் மற்றும் புயல் காலங்களில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது. இதனால் இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் கோடியக்கரை மற்றும் மல்லிப்பட்டினம் பகுதிகளில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வருகி்ன்றனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலால் இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. படகுகள் தொடர்ந்து சேதம் அடைவதால் இப்பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கடல் சீற்றத்தில் இருந்து மீன்பிடி படகுகளை பாதுகாக்க ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி செலவில் தூண்டில் முள் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து ஆறுகாட்டுதுறையில் தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரிய கருங்கற்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து கடற்கரையில் கொட்டப்படுகிறது.

தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கருங்கற்கள் ஏற்றி வரப்பட்டு இரவு, பகலாக தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணி விரைவில் முடிவடைந்து தூண்டில் முள் வளைவுசெயல்பாட்டுக்கு வந்தால் இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகளை எங்கள் ஊரிலேயே நிறுத்தி கொள்ளலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story