மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு தர்ஷினி (5) என்ற மகளும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். அசோக்குமார் கடந்த 6 ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அசோக்குமார் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அலமேலுபுரத்தில் புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த அசோக்குமாருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழிற்சங்கத்தினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பார்வதி, அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா சோமசுந்தரம், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பவுன்ராஜ், உதவி பொறியாளர் வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசுக்கு பரிந்துரை
அப்போது இறந்த மின்வாரிய ஊழியர் அசோக்குமாரின் குடும்பத்திற்கு மின்சார வாரியத்துறையின் சார்பில் ரூ.5 லட்சம், காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம், முதல்-அமைச்சரின் நிவாரண தொகை ரூ.2 லட்சம், அவர், மின்சார வாரியத்தில் பணி செய்தமைக்கான சான்று மற்றும் அவருடைய மனைவி உமாமகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உயிரிழந்த அசோக்குமாரின் உடலை பெற்று சென்றனர்.
Related Tags :
Next Story